அரபிக் கடலில் நேரடி துப்பாக்கி சுடும் பயிற்சி: இந்திய கடற்படை தகவல்
அரபிக் கடலில் நேரடி துப்பாக்கி சுடும் பயிற்சி: இந்திய கடற்படை தகவல்
ADDED : மே 03, 2025 09:47 PM

புதுடில்லி: மே 7ம் தேதி வரை அரபிக் கடலில் நேரடி துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி கூறினார்.
ஏப்.22ல் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானை காரணம் என்று குற்றம் சாட்டிய இந்தியா, சம்பவத்துக்கு தக்க பதிலடி தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ராணுவ ரீதியாக பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கடற்படை துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் இறங்கியுள்ளது.
இது குறித்து கடற்படை வட்டார தகவல் தெரிவித்துள்ளதாவது:
இந்திய கடற்படை இன்று முதல் 7 வரை அரபிக் கடலில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை நடத்த உள்ளது.
நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சி என்பது கடற்படை வீரர்கள் உண்மையான போர் சூழ்நிலைகளில் நேரடி வெடிமருந்துகளைப் பயன்படுத்தும் ஒரு ராணுவப் பயிற்சியாகும். போர் தயார்நிலை மற்றும் சோதனை உபகரணங்களை ஆராய்வதற்காக இத்தகைய பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்து உரையாடினார். அப்போது செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் அரபிக் கடலில் பயிற்சிகள் உட்பட நடந்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
கடந்த சில நாட்களாக, கடற்படை, இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்ள அரபிக் கடலில் விரிவான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது, எந்தவொரு அசாதாரண நடவடிக்கைக்கும் எதிராக போர்க்கப்பல்கள் எச்சரிக்கையாக உள்ளன.