எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
ADDED : மே 13, 2025 08:49 AM

ஸ்ரீநகர்: ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது'' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கிடையே கடந்த 10ம் தேதி, இருதரப்பிலும் போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்று பேச்சு நடத்தினர். அப்போது, இருதரப்பிலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை சுமூகமாக கடைப்பிடிப்பது குறித்து ஆலோசனை நடந்தது.
தற்போது ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
நேற்று இரவு சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ''எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்'' என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.