ADDED : செப் 27, 2024 07:56 AM
ஹாசன்: பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், உடல் நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஹாசன், அரகலகூடின் ராகி மரூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று மதியம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்கள், ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். பலர் வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்டனர்.
ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை, கோனனுார் சமுதாய பவன், அரகலகூடு தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகம் பாதிப்படைந்த எட்டு மாணவர்கள் ஹாசன் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
மதியம் பல்லி விழுந்து அசுத்தமடைந்த உணவை, மாணவர்களுக்கு பரிமாறியதே அசம்பாவிதத்துக்கு காரணமாகும். மாணவர்கள் பாதிக்கப்பட்ட தகவலறிந்த பெற்றோர், பீதியடைந்து பள்ளியில் குவிந்தனர். பல்லி விழுந்த உணவை மாணவர்களுக்கு பரிமாறிய ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயலை, பெற்றோர் கண்டித்தனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
தகவலறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவனைக்கு வந்து மாணவர்களை நலம் விசாரித்தனர்.

