ADDED : பிப் 20, 2024 11:30 PM

பல்லாரி, : பா.ஜ.,வின் கோட்டையாக இருந்த பல்லாரியை தன் வசப்படுத்திக் கொண்ட காங்கிரசில், லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பட்டியலில் பெயர்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
கடந்த சட்டசபை தேர்தலில் பல்லாரி மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், ஆறில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இம்முறை லோக்சபா தொகுதியையும் கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அரசியலில் வெறுப்பு
இதற்காக இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் நாகேந்திராவை களமிறக்க திட்டமிட்டது. ஆனால், அவர், தனக்கு தேசிய அரசியலில் விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆனால், இத்தொகுதியில் போட்டியிட அமைச்சர் நாகேந்திராவின் சகோதரர் வெங்கடேஷ் பிரசாத் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அதுபோன்று முன்னாள் எம்.பி., உக்ரப்பா, கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இம்முறை 'நானே வேட்பாளர்' என நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
சந்துார் எம்.எல்.ஏ., துக்காராமுக்கு, அமைச்சர் சந்தோஷ் லாட் ஆதரவு தெரிவித்தார். இதை மறுத்த துக்காராம், தனது மகள் சவுபர்ணிகா 'சீட்' வருவதாக தெரிவித்தார். இத்தனை போட்டிகளுக்கு இடையில், உள்ளூர் தலைவர் குஜ்ஜல் நாகராஜும் சீட்டுக்கு ஆசைப்பட்டு வருகிறார்.
இதற்கிடையில் பல்லாரியில், அமைச்சர் ராஜண்ணா மகனும், எம்.எல்.சி.,யுமான ராஜேந்திரனுக்கு சீட் வழங்க, சிலர் பரிந்துரை செய்தனர். இதற்கு ராஜேந்திரன், 'என்னை பல்லாரி அல்லது ராய்ச்சூரில் போட்டியிட பரிந்துரைத்தது உண்மை தான். ஆனால் எனக்கு துமகூருவே போதும்' என்றார்.
மொளகால்மூரு எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணனின் பெயரும் அடிபட்டது. இதை மறுத்த அவர், நான் போட்டியிடவில்லை. எனது சகோதரர் ஹனுமந்தப்பாவும் ஆசைப்படுபவர் அல்ல என்றார். இருப்பினும், இவரை போட்டியிட வைக்க சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
தலைவர்கள் கருத்து
ஏனெனில் கோபால கிருஷ்ணன், பல்லாரி ரூரல், குட்லகி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.
உள்ளூர் களம் அவருக்கு நன்றாகவே தெரியும். இதை சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
பல்லாரி தொகுதி உள்ளூர் நபருக்கு வழங்கப்படுமா அல்லது வெளியூர் நபருக்கு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

