ADDED : செப் 26, 2024 06:31 AM

ஹூப்பள்ளி: கர்நாடகாவின் ஹூப்பள்ளி - சோலாபூர் வழித்தடத்தில், சரக்கு ரயிலின் இன்ஜின் தடம் புரண்டதால், அவ்வழியாக செல்ல வேண்டிய ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
விஜயபுராவில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு காலியான சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
ஹூப்பள்ளி - சோலாபூர் இடையே பீமா பாலம் அருகில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சரக்கு ரயிலின் இன்ஜின் தடம் புரண்டது.
இதுதொடர்பாக, தென்மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கனமடி கூறியதாவது:
பீமா ஆறு அருகில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, தடம் புரண்டது. இதனால் அவ்வழியாக இயக்கப்பட இருந்த ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்ந்து பாதையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்கள் ரத்து செய்ப்பட்டதால், விஜயபுராவில் இருந்து கலபுரகிக்கு செல்ல காத்திருந்த 1,000 பயணியருக்கு, ரயில்வே நிர்வாகம் சார்பில் பஸ் வசதி செய்து தரப்பட்டது.
ரயில் எண் 17030 ஹைதராபாத் - விஜயபுரா; 17319 ஹூப்பள்ளி - ஹைதராபாத் ரயில் ஆகியவை நேற்றும்; 17663 விஜயபரா - ராய்ச்சூர், 11305 சோலாபூர் - ஹொஸ்பேட், 17320 ஹைதராபாத் - ஹூப்பள்ளி ஆகிய மூன்று ரயில்கள் இன்றும்; 11306 ஹொஸ்பேட்- சோலாபூர் ரயில் நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
� பீமா பாலம் அருகில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது. �விஜயபுராவில் இருந்து கலபுரகிக்கு, ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்களில் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.