ADDED : அக் 19, 2024 11:04 PM
ராம்நகர்: முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ராம்நகர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
ராம்நகர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற வாகனங்களை ஓட்டிக்காட்ட வருவோரிடம், இடைத்தரகர்கள் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணம் கொடுக்காவிட்டால் எந்த வேலையும் நடப்பது இல்லை என்றும், ராம்நகர் லோக் ஆயுக்தா எஸ்.பி., சினேகாவுக்கு அடிக்கடி புகார்கள் சென்றன.
இந்நிலையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சோதனையின்போது இடைத்தரகர் நாகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது சட்டை பையில் ஆவணங்கள் பாதுகாப்பு அறையின் சாவி இருந்தது. அந்த சாவி, அவருக்கு எப்படி கிடைத்தது, அவரிடம் கொடுத்தவர்கள் யார் என்றும் விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து எஸ்.பி., சினேகா நேற்று கூறுகையில், ''ராம்நகர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த சோதனையின்போது, இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பது தெரிந்து உள்ளது. ஒருவரை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடக்கிறது. அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் கைதாகவில்லை. சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். அதை சரிபார்ப்போம். சட்டவிரோத செயல்கள் நடந்து இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.