டைனோசர்களை போல காங்கிரஸ் அழியும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கணிப்பு
டைனோசர்களை போல காங்கிரஸ் அழியும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கணிப்பு
ADDED : ஏப் 12, 2024 06:00 PM

கவுச்சார்: ''காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவராக பா.ஜ., மற்றும் வேறு கட்சிகளில் சேர்கின்றனர்; அந்த கட்சி டைனோசர் இனம் அழிந்ததைபோல இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும்'' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் கவுச்சார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரசில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறி பா.ஜ.,விலும் மற்ற கட்சிகளிலும் சேர்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி, டைனோசர் இனம் அழிந்ததுபோல, அழிந்துவிடும். 2024 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் என சொன்னால் சின்ன குழந்தைகள் யார் என கேட்பார்கள். காங்கிரஸ் கட்சி, டிவியில் வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி போல மாறிவிட்டது. உட்கட்சி பிரச்னையால் தினமும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கின்றனர், போட்டி போடுகின்றனர்.
உலகளவில் இந்தியாவின் அந்தஸ்து வேகமாக உயர்ந்துள்ளது. இப்போது உலகமே இந்தியா சொல்வதைக் கேட்கிறது. உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 5வது இடத்தை எட்டியிருக்கிறது. 2027க்குள் 3வது இடத்தை பிடித்துவிடுவோம். இந்தியா பலவீனமான நாடாக இல்லை, வலிமையான தேசம். தேசத்தின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ., தான். எங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

