பா.ஜ.,வின் வாக்குறுதிகள் என்னாச்சு என மக்கள் கேள்வி: சொல்கிறார் சசிதரூர்
பா.ஜ.,வின் வாக்குறுதிகள் என்னாச்சு என மக்கள் கேள்வி: சொல்கிறார் சசிதரூர்
ADDED : ஏப் 12, 2024 04:42 PM

திருவனந்தபுரம்: பா.ஜ.,வினர் கேரளாவுக்கு அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு என மக்கள் கேட்பார்கள் என காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியுள்ளார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் சின்னம் இருப்பதாக பிரதமர் மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து சசிதரூர் அளித்த பதில்: உண்மையை சொல்ல வேண்டுமானால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இங்கு எடுபடாது. அதனால் அவர்கள் வேறு ஏதாவது முயற்சிக்கலாம். இங்கு (கேரளா) வந்து முஸ்லிம் லீக், ராமர் கோயில் என பேசினால், மக்கள் எல்லோரும், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு போன்று அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு என கேட்பார்கள்.
பா.ஜ., சாதனைகள் மிகவும் மோசமாக உள்ளது. கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆயுர்வேதத்திற்கு தேசிய பல்கலைக்கழகம், மாற்றுத்திறனாளிக்காக தேசிய பல்கலைக்கழகம் ஆகிய 3 முக்கிய வாக்குறுதிகளை பா.ஜ., அளித்தது. ஆனால் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் என் தொகுதியில் பா.ஜ., இரண்டாவது இடத்தையே பிடித்தது.
கேரளாவில் கம்யூனிஸ்ட் பிரசாரம் மந்தமாக உள்ளது. பா.ஜ., இந்த தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் திருவனந்தபுரம் பா.ஜ.,வின் வலுவான தொகுதியாக உள்ளது. நாங்களும் சமமான வீரியத்துடனும் நம்பிக்கையுடனும் மோதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

