UPDATED : பிப் 23, 2024 02:05 PM
ADDED : பிப் 23, 2024 01:18 PM

புதுடில்லி: மார்ச் 8 அல்ல மார்ச் 13ம் தேதி லோக்சபா தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
17வது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 16ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால் 18வது லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கமிஷனும் அதற்கான பணிகளை பல மாதங்களுக்கு முன்பே துவங்கி, தற்போது விரைவுபடுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2014ல் ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்து 2019 தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதற்கான அறிவிப்பு மார்ச் 10ல் வெளியிடப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை மே 23ல் நடந்தது. அதேபோல் இந்த ஆண்டும் பல கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி, ஓட்டு எண்ணும் நாள், எத்தனை கட்டங்களாக தேர்தல் போன்றவை பற்றிய அறிவிப்பு மார்ச் 8 அல்லது 13ல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.