சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் லோக்சபா தேர்தல் பிரசாரம் துவக்கம்
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் லோக்சபா தேர்தல் பிரசாரம் துவக்கம்
ADDED : பிப் 14, 2024 05:35 AM
பெங்களூரு : சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு, அனைத்து கட்சிகளும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று முன்தினம் பெங்களூரு விதான் சவுதாவில் துவங்கியது. வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ளது.
கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகள் வெளியிட ஆளுங்கட்சி தயாராகிறது. மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட அமைச்சர்கள் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அப்போது எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த கூடும் என்பதால், தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதால், இந்த விவாதங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்று, மாநில அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பேசுவதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி உட்பட பா.ஜ., உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர்.
அப்போது ஆளுங்கட்சியை திணறடித்து போராட்டம் நடத்த தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கூட்டத்தொடர் முடியும் வரை கட்டாயமாக தினமும் ஆஜராகும்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ம.ஜ.த., குழு தலைவர் குமாரசாமி பேசும் போதும், அவையில் அனைவரும் இருக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன், அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று, லோக்சபா தேர்தல் பணிகளை கவனிக்கும்படி அந்தந்த கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
பூத் அளவிலும், வார்டு அளவிலும், தொகுதி அளவிலும் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கு கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தெருவோர பிரசாரம், எல்.இ.டி., திரை மூலம் பிரசாரம், பைக் பேரணி, பொது கூட்டம், ஆட்டோவில் பிரசாரம் என பல்வேறு பிரசார யுத்திகளை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுஉள்ளது.

