லோக்சபா தேர்தலில் போட்டி ராஜிவ்சந்திர சேகர் உற்சாகம்
லோக்சபா தேர்தலில் போட்டி ராஜிவ்சந்திர சேகர் உற்சாகம்
ADDED : பிப் 17, 2024 11:27 PM

''முதல் லோக்சபா தேர்தலை எதிர்பார்த்து போட்டியிட உற்சாகமாக உள்ளேன். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை கட்சி தலைவர்கள் முடிவு செய்வர்,'' என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
கர்நாடக ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் பதவி காலம், ஏப்ரல் 2ம் தேதி நிறைவடைகிறது.
போட்டி எங்கே?
இதற்கான தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக ரங்கநாத் அறிவிக்கப்பட்டார். அதே வேளையில், லோக்சபா தேர்தலில் பெங்களூரில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், புதுடில்லியில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அளித்த பேட்டி:
என் அரசியல் வாழ்க்கையின் மற்றொரு பரபரப்பான கட்டத்தை எதிர்பார்க்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் கீழ் பணிபுரிவது என் அதிர்ஷ்டம். இதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு தகுதி உள்ளது.
நான் பெங்களூரு அல்லது கேரளாவில் போட்டியிடலாம் என்ற தகவல் வெறும் ஊகங்கள். எந்த தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். முதல் லோக்சபா தேர்தலை எதிர்பார்த்து போட்டியிட உற்சாகமாக உள்ளேன்.
மக்களுடன் நெருக்கம்
லோக்சபா எம்.பி.,யாவது எளிதானது அல்ல. இதற்கு, மக்களுடன் இணக்கமாக, அடிமட்ட அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.
இன்றைய நவீன தகவல், சமூக ஊடக உலகில், அரசியல்வாதிகள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். என்னால் அதை செய்ய முடியும் என்று என் கட்சி தலைமை உணர்ந்ததில் மகழ்ச்சி அளிக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவை சேர்ந்த ராஜிவ் சந்திர சேகர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் குடியேறினார். தொழிலதிபரான இவர், 2006, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.