UPDATED : ஜன 27, 2024 05:59 PM
ADDED : ஜன 23, 2024 11:25 PM

புதுடில்லி : லோக்சபா தேர்தல் ஏப்ரல் 16ல் துவங்கும் என உத்தேசமாக தேதி நிர்ணயம் செய்து பணிகளை விரைவுபடுத்தும்படி, மாநில தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய லோக்சபாவின் ஆயுட்காலம் மே மாதம் முடிகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தியாக வேண்டும். இதற்காக கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் கமிஷனும் அதற்கான பணிகளை பல மாதங்களுக்கு முன்பே துவங்கி, தற்போது விரைவுபடுத்தி உள்ளது.
கடந்த 2014ல் ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்து 2019 தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதற்கான அறிவிப்பு மார்ச் 10ல் வெளியிடப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை மே 23ல் நடந்தது. கடந்த இரண்டு தேர்தல்களை போலவே, 18வது லோக்சபாவுக்கான தேர்தலும் பல கட்டங்களாக நடக்க உள்ளது. முன்கூட்டியே நடக்கலாம் என ஊகங்கள் வெளியாகின்றன.
இந்நிலையில், புதுடில்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் சுற்றறிக்கையில், ஏப்ரல் 16ம் தேதியை உத்தேச தேர்தல் துவக்க நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தேதியை மையமாக வைத்து, தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கால அட்டவணைகளின்படி, தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை இறுதி செய்யும்படி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் தேர்தல் நடத்தி முடித்த காலம் முடிந்து விட்டதால், இந்த முறையும் தேர்தலை பல கட்டங்களாக நடத்துவது தேர்தல் கமிஷன் பரிசீலனையில் உள்ளது. எந்த மாநிலத்துக்கு என்ன தேதி என்பதை தீர்மானிக்க தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. உத்தேச தேதியே ஊர்ஜிதம் செய்யப்பட்டால், மார்ச் முதல் வாரம் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.புதுடில்லி அதிகாரியின் சுற்றறிக்கை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியதால், 'சுற்றறிக்கையில் குறிப்பிட்டது வேலையை விரைவுபடுத்த நிர்ணயித்த ஒரு உத்தேச தேதி மட்டுமே' என இணையத்தில் அவர் விளக்கம் தெரிவித்து உள்ளார்.

