லோக்சபா தேர்தல் முடிவு: மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்கு மத்திய அரசு மறுப்பு
லோக்சபா தேர்தல் முடிவு: மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்கு மத்திய அரசு மறுப்பு
ADDED : ஜன 13, 2025 07:58 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது தவறு என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜோ ரோகனுடன் சமீபத்தில் நடத்திய பாட்காஸ்டில், ஜுக்கர்பெர்க், '2024 உலகம் முழுவதும் ஒரு பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியாவைப் போல பல நாடுகளிலும் தேர்தல்கள் நடந்தன. இந்தியா உட்பட பல நாடுகளில் ஆட்சியாளர்கள் தோல்வியை தழுவினர்.
பணவீக்கம் அல்லது கொரோனா தொற்றை சமாளிப்பதற்கான பொருளாதாரக் கொள்கைகள் அல்லது அரசாங்கங்கள் கொரோனாவை எவ்வாறு கையாண்டன என்பது காரணமாக இருக்கலாம். இது உலகளாவிய விளைவை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது என்று கூறியிருந்தார்.
Facebook, instagram, whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களை நடத்தும் ஜுக்கர்பெர்க் இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில்
கூறியுள்ளதாவது:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா 2024 தேர்தலை 64 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுடன் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான என்.டி.ஏ., மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். 2024 தேர்தல்களில் இந்தியா உட்பட பெரும்பாலான பதவியில் இருந்த அரசுகள் எல்லாம் கோவிட்-க்குப் பிறகு தோற்றன என்ற ஜுக்கர்பெர்க்கின் கூற்று உண்மையில் தவறானது.
2024 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. தொற்றுநோய் காலத்தில் அரசாங்கத்தின் முன்முயற்சிகள் - 80 கோடி மக்களுக்கு இலவச உணவு விநியோகம், 220 கோடி இலவச தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் சர்வதேச உதவிகளை வழங்குதல் ஆகியவையே சான்று.
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியால் தவறான தகவல் பரவியது ஏமாற்றமளிக்கிறது. உண்மைகளையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்துவோம்.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளார்.