ADDED : ஜன 11, 2024 03:35 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், ஒரே நாளில் நேற்று காங்கிரஸ், பா.ஜ., தலைவர்கள் தனித்தனியே பெங்களூரில் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் புதிய ஆட்சிக்கான லோக்சபா தேர்தல் நடத்தப்பட வேண்டும். 2019ல் நடந்த தேர்தலில், தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் தான் பா.ஜ.,வுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தன. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், 25ஐ கைப்பற்றியது. ஒரு தொகுதியில் பா.ஜ., ஆதரவு சுயேச்சை வென்றது.
மண்டல வாரியாக
எனவே இம்முறையும் கடந்த தேர்தல் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள, பா.ஜ., முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் மாநில அளவில் முக்கிய பிரமுகர்களுடன் மாநில தலைவர் விஜயேந்திரா ஆலோசனை நடத்தினர்.
மேலும், ஊடக ஒருங்கிணைப்பாளர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி ஆலோசனை நடத்தி, சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்.
பிரமுகர்கள்
பெங்களூரு எலஹங்காவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், நேற்று முதல் மண்டல வாரியாக, லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டத்தை பா.ஜ., துவக்கியது.
முதல் நாளான நேற்று, கல்யாண கர்நாடகா மண்டலத்தின் பீதர், கலபுரகி, ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி; மைசூரு மண்டலத்தின் மைசூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா, ஹாசன்; துமகூரு மண்டலத்தின் துமகூரு, சிக்கபல்லாபூர், கோலார், பெங்களூரு ரூரல் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட பிரமுகர்களுடன் ஆலோசனை நடந்தது.
முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி ஆகியோர், தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பதையும், கட்சி யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினர்.
இன்று, மங்களூரு மண்டலத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி - சிக்கமகளூரு, ஷிவமொகா, உத்தர கன்னடா; கித்துார் மண்டலத்தின் பெலகாவி, சிக்கோடி, பாகல்கோட், விஜயபுரா;
தார்வாட் மண்டலத்தின் தார்வாட், ஹாவேரி, தாவணகெரே, சித்ரதுர்கா;
பெங்களூரு மண்டலத்தின் பெங்., தெற்கு, பெங்., மத்திய, பெங்., வடக்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளன.
இலக்கு நிர்ணயிப்பு
மற்றொரு பக்கம் கர்நாடகாவின் ஆளுங்கட்சியான காங்கிரசும், நேற்று முதல் லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டத்தை துவங்கியது.
மாநில தலைவரான, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், நகரின் ஜஸ்மா தேவி பவன் சாலையில் உள்ள இந்திரா பவன் அரங்கில் நேற்று கூட்டம் நடந்தது.
முதல்வர் சித்தராமையா, கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த முறை சந்தித்த பின்னடைவை, சரி செய்யும் வகையில், இம்முறை 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர்கள் இலக்கு நிர்ணயித்தனர்.
'வாக்குறுதித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றாலே, நிச்சயம் வெற்றி பெறுவோம். தொண்டர்களை உற்சாகப்படுத்தி வெற்றிக் கனியை பறிக்க வேண்டும்' என்று கூறினர்.