மார்க்சிஸ்டை கழற்றி விடுங்கள்: காங்கிரசுக்கு மம்தா கண்டிஷன்
மார்க்சிஸ்டை கழற்றி விடுங்கள்: காங்கிரசுக்கு மம்தா கண்டிஷன்
UPDATED : பிப் 01, 2024 10:50 AM
ADDED : பிப் 01, 2024 01:06 AM

மால்டா: திரிணமுல் காங்கிரஸ் சார்பில், 'ஜோனோ சன்ஜோக்' எனப்படும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் யாத்திரை துவங்கப்பட்டது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி, மாவட்டந்தோறும் சென்று மக்களுடன் உரையாடுவதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
நேற்று மால்டா மாவட்டத்தில், தன் யாத்திரையை துவங்கிய முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள மக்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து, இம்மாநிலத்தில் பா.ஜ.,வை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. 34 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில மக்களை கொடுமைக்கு உள்ளாக்கியது. இதை யாரும் மறக்க மாட்டார்கள்.
எனவே, அக்கட்சியை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்; அக்கட்சிக்கு ஆதரவளிக்கும் யாரையும் நான் மன்னிக்க மாட்டேன். காரணம், அவர்கள் மறைமுகமாக பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இதை, நான் பஞ்., தேர்தலிலேயே கண்கூடாக பார்த்தேன். இதை கருத்தில் கொண்டே, வரும் லோக்சபா தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு ஆதரவு அளிக்கும் எந்த கட்சிக்கும் ஒரு தொகுதி கூட தர மாட்டோம் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். எனவே, இத்தேர்தலில் திரிணமுல் காங்., தனித்து போட்டியிடும். மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கட்டும். மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் ரீதியாக போராடக்கூடிய திறன் திரிணமுல் காங்.,க்கு மட்டுமே உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை, பிப்., 1க்குள் மத்திய அரசு வழங்கவில்லை எனில், மறுநாள் முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.