ஆட்டம் காணும் ‛இண்டியா' கூட்டணி: மே.வங்கத்தில் திரிணமுல், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப்போட்டி
ஆட்டம் காணும் ‛இண்டியா' கூட்டணி: மே.வங்கத்தில் திரிணமுல், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப்போட்டி
UPDATED : ஜன 24, 2024 03:11 PM
ADDED : ஜன 24, 2024 12:50 PM

கோல்கட்டா: பா.ஜ.,வுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள ‛ இண்டியா' கூட்டணி தேர்தலுக்கு முன்பே ஆட்டம் காண துவங்கி உள்ளது. மே.வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா அறிவித்துள்ளார். இதனையடுத்து சில மணி நேரங்களில், பஞ்சாபில் தனித்து களமிறங்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால், இக்கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, 28 கட்சிகள் அடங்கிய, இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் ஒரு விசித்திரமான சூழ்நிலை மேற்கு வங்கத்தில் உள்ளது.
மாநிலத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக, 3௦ ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்குடன் இருந்து வந்தது.
மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு, பேச்சளவுக்கே நடந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட திரிணமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு வேண்டுமானால், இரண்டு தொகுதிகளை தருவதற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளது.
தனித்தே போட்டி
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: நான் இண்டியா கூட்டணியில் ஒரு அங்கம். ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. காங்கிரசுடன் எந்த உறவும் இல்லை. வரும் லோக்சபா தேர்தலில் நான் தனித்தே போட்டியிடுவேன். தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்.
நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வை தோற்கடிப்போம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
பஞ்சாபிலும்...
இந்நிலையில், பஞ்சாபிலும் இண்டியா கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் தனித்து களம் இறங்க உள்ளதாக முதல்வர் பக்வந்த் மன் கூறியுள்ளார். 40 வேட்பாளர்களை தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆய்வு செய்து 13 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே, இண்டியா கூட்டணி ஆட்டம் காணத் துவங்கி உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இது போல் இன்னும் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.

