கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை: வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சமாஜ்வாதி மீது காங்., அதிருப்தி
கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை: வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சமாஜ்வாதி மீது காங்., அதிருப்தி
ADDED : ஜன 31, 2024 01:36 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. தாங்கள் கேட்ட இடங்களிலும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது எனக் கூறியுள்ளது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக ஒருங்கிணைந்த ‛இண்டியா' கூட்டணியில் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவி வருகிறது. மே.வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என மம்தா அறிவித்தார். அவரை பின்பற்றிய ஆம் ஆத்மி, பஞ்சாபில் தனித்து போட்டியிடுவோம் எனக்கூறியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி மீண்டும் பா.ஜ., அணியில் இணைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ம.பி., சட்டசபை தேர்தல் முதல் காங்கிரசுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்தன. இதனால், சமாஜ்வாதியும் கூட்டணியில் இருந்து வெளியேறும் எனக்கூறப்பட்டது. இருப்பினும், உ.பி.,யில் இரு கட்சிகள் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதால், 11 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி ஒதுக்கியது.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உ.பி., மாநில தேர்தல் பொறுப்பாளர் அவினாஸ் பாண்டே கூறுகையில், சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. கூட்டணி குறித்து ஒரு தலைபட்சமாக அக்கட்சி செயல்படுகிறது. நாங்கள் கேட்ட இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இது குறித்து எங்களிடம் தகவல் ஏதும் கூறவில்லை. அக்கட்சி ஆபத்தான அரசியல் செய்கிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை பின்பற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.