"ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சிறை தான்"- எச்சரிக்கிறார் அமித்ஷா
"ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சிறை தான்"- எச்சரிக்கிறார் அமித்ஷா
ADDED : மார் 20, 2024 02:54 PM

புதுடில்லி: 'ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அமித்ஷா கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியை வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுத வேண்டும். பெண்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். இந்த முறை தேர்தலில், பிரதமர் மோடிக்கு ஓட்டளித்து தங்களின் உண்மையான பலத்தை காட்ட வேண்டும் என பெண்கள் முடிவு செய்து விட்டனர்.
இண்டியா கூட்டணி
தென்னிந்தியா, வட இந்தியா என இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை. தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ., நிறைய நன்கொடை பெற்றதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது தவறானது. பா.ஜ.,விட காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அதிக நிதி பெற்றுள்ளது. 17 மாநிலங்களில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி நடக்கிறது. ஆனால் இண்டியா கூட்டணி எத்தனை மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன?.
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, கறுப்புப் பணத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும். மேற்குவங்கத்தில் அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.51 கோடியும், காங்கிரஸ் எம்.பி வீட்டில் இருந்து ரூ.355 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது என நாட்டு மக்களுக்கு ராகுல் பதில் சொல்ல முடியுமா?.
லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றி வருவதால் இந்த இலக்கை அடைய முடியும். தேர்தல் நெருங்கும் போது எல்லாம், எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடியை துஷ்பிரயோகம் செய்யத் துவங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

