UPDATED : மே 29, 2024 11:42 PM
ADDED : மே 29, 2024 11:38 PM

புதுடில்லி : லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், கடைசி மற்றும் ஏழாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 57 லோக்சபா தொகுதிகளுக்கு ஜூன் 1ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நாட்டின் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏழு கட்டங்களாக நடக்கிறது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
நாளை மறுநாள்
இதன்படி, ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், மே 7ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில், 92 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
தொடர்ந்து, மே 13ல் நடந்த நான்காம் கட்ட தேர்தலில், 96 தொகுதிகளுக்கும், மே 20ல் நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில், 49 தொகுதிகளுக்கும், மே 25ல் நடந்த ஆறாம் கட்ட தேர்தலில், 58 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
கடைசி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடக்கிறது. ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 57 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதன்படி, பீஹாரில் எட்டு; ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு; ஜார்க்கண்டில் மூன்று; ஒடிசாவில் ஆறு; பஞ்சாபில் 13; உத்தர பிரதேசத்தில் 13; மேற்கு வங்கத்தில் ஒன்பது மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள ஒரேயொரு தொகுதிக்கும் நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மேலும், ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதி களில், முதல் மூன்று கட்டங்களில், 105 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை மறுதினம் நடக்கும் கடைசி மற்றும் நான்காம் கட்ட தேர்தலில், 42 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும், உ.பி.,யின் வாரணாசி தொகுதிக்கும் கடைசி கட்ட தேர்தலில் தான் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இத்தொகுதியில் போட்டியிட கடந்த 14ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினம் நடந்த சாலைப் பேரணியை தவிர, வாரணாசியில் வேறெந்த பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், கடைசி மற்றும் ஏழாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. பிரசாரத்துக்கான கடைசி நாள் என்பதால், தங்களது கட்சிகளுக்கு ஆதரவு கோரி அரசியல் கட்சி தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவர்.
தீவிர பிரசாரம்
அதன்படி, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அக்கட்சி தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழு கட்டங்களில் பதிவாகும் ஓட்டுகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.