UPDATED : ஜன 13, 2024 06:18 PM
ADDED : ஜன 13, 2024 12:11 PM

புதுடில்லி: ‛ இண்டியா ' கூட்டணி கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதனிடையே, இக்கூட்டணியின் தலைமை பதவியை ஏற்க பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கார்கேயை கூட்டணியின் தலைவராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறபபடுகிறது.
பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ‛ இண்டியா' கூட்டணி என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன. இக்கூட்டணியின் கூட்டம், பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் புது டில்லியில் நடந்தது.
இன்று (ஜன-13) இக்கூட்டணி கட்சித் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி., ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தொகுதி பங்கீடு, தேர்தலுக்கு தயார் ஆவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டணியின் தலைமைப்பதவியில் பீஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ்குமார் நியமிக்கப்படலாம் எனக்கூறப்பட்டது. ஆனால், அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு அந்தப்பதவியை வழங்கலாம் எனவும் அவர் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து இண்டியா கூட்டணியின் தலைவர் பதவியில் மல்லிகார்ஜூன கார்கேயை நியமிக்கலாமா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மம்தா மற்றும் அகிலேஷ் யாதவுடன் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமூகம்
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் காணொளி வாயிலாக விவாதம் நடத்தினோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்தோம்.
ராகுல் மணிப்பூரில் துவங்க உள்ள யாத்திரையில் அனைத்து இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களின் வசதிக்கேற்ப பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். பொருளாதார பிரச்னைகளை எழுப்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ராகுல் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே தெரிவித்துள்ளார்.
சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் கார்கேவை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு பற்றி இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.