குலாம் நபி ஆசாத்தை எதிர்த்து களமிறங்குகிறார் முப்தி
குலாம் நபி ஆசாத்தை எதிர்த்து களமிறங்குகிறார் முப்தி
UPDATED : ஏப் 07, 2024 05:49 PM
ADDED : ஏப் 07, 2024 05:23 PM

ஸ்ரீநகர்: லோக்சபா தேர்தலில் ஆனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தான் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டியிடுகிறார்.
தேசிய அளவில் ‛ இண்டியா ' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை காஷ்மீரில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்.,ம் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற குலாம் நபி ஆசாத் ‛ஜனநாயக வளர்ச்சி ஆசாத்' என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவரும் அங்கு களமிறங்கி உள்ளார். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 லோக்சபா தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியில் போட்டியிட போவதாக மெகபூபா முப்தி அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் அவருக்கு பரவலாக செல்வாக்கு உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்து உள்ளனர். இந்த தொகுதியில் தான், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் களமிறங்கி உள்ளார். தேசிய மாநாட்டு கட்சி சார்பில், மியான் அல்தாப் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் கடந்த முறை தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

