4ம் கட்ட தேர்தல்: அதிகபட்சமாக மே.வங்கத்தில் 76.02% ஓட்டுப்பதிவு
4ம் கட்ட தேர்தல்: அதிகபட்சமாக மே.வங்கத்தில் 76.02% ஓட்டுப்பதிவு
UPDATED : மே 13, 2024 09:14 PM
ADDED : மே 13, 2024 10:55 AM

புதுடில்லி: 4ம் கட்ட லோக்சபா தேர்தலின்போது ஆந்திராவில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓய்.எஸ்.ஆர் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்கத்தில் திரிணமுல் கட்சி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 4ம் கட்ட தேர்தலில், இரவு 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மே.வங்கத்தில் 76.02% ஓட்டுப்பதிவானது.
பீஹார் (5தொகுதிகள்) , உத்தர பிரதேசம் (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (8தொகுதிகள்), ஆந்திரா (25 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (4தொகுதிகள்), மத்திய பிரதேசம் (8 தொகுதிகள்), மஹாராஷ்டிரா (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), தெலுங்கானா ( 17 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி) உட்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று (மே 13) ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டசபை தேர்தலும் நடந்தது.
ஓட்டு இயந்திரம் உடைப்பு
ஆந்திராவில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓட்டுச்சாவடியில், ஓய்.எஸ்.ஆர் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொண்டர்கள் ஓட்டுச்சாவடிக்கு நுழைந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
கொலை
மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கேதுகிராமில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு திரிணமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொல்லப்பட்டார். முன்பகை காரணமாக கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கம் பீர்பும் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வெளியே இருந்த தங்களது கடையை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தியதாக பா.ஜ.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓட்டுப்பதிவு நிலவரம்
4ம் கட்ட லோக்சபா தேர்தலில், இரவு 8 மணி நேர நிலவரப்படி 63.04% ஓட்டுப்பதிவாகி உள்ளது. மாநிலம் வாரியாக நிலவரம் பின்வருமாறு:
ஆந்திரா - 68.20% ,
பீஹார் - 55.92%,
ஜம்மு காஷ்மீர் - 36.88%
ஜார்க்கண்ட் - 64.30%,
மத்திய பிரதேசம் - 69.16%,
மஹாராஷ்டிரா - 52.93%,
ஒடிசா - 64.23%,
தெலுங்கானா - 61.59%,
உத்தரபிரதேசம் - 58.02%,
மேற்குவங்கம் - 76.02%
சட்டசபை தேர்தல்
ஆந்திராவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 67.99% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 62.96% ஓட்டுப்பதிவானது.