நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய லோக்சபாவில் தீர்மானம்! : சபாநாயகர் உத்தரவு
நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய லோக்சபாவில் தீர்மானம்! : சபாநாயகர் உத்தரவு
UPDATED : ஆக 13, 2025 10:29 AM
ADDED : ஆக 13, 2025 01:32 AM

பண மூட்டை விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய லோக்சபாவில் எம்.பி.,க்கள் அளித்த தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அர்விந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். டில்லியில் உள்ள அவரது வீட்டில், கடந்த மார்ச் 14-ல் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் போது, ஓர் அறையில் இருந்து பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. விபத்து நடந்த போது, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்தார். மேலும், இது குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
பரிந்துரை உச்ச நீதிமன்ற உள் விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பதவி விலகும்படி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவர் முரண்டு பிடித்தார். இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும்படி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யவும், பார்லிமென்டில் அதற்கான தீர்மானத்தை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.,க்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அவர்களும் ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமளிக்கு பின் மதியம் 12:00 மணிக்கு லோக்சபா நேற்று கூடிய போது, சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:
பண மூட்டை விவகாரத்தில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் 21ல், என்னிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உட்பட 146 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதில், 'நீதித் துறையில் ஒரு சாதாரண மனிதன் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடித்தளமே, குற்றமற்ற தன்மையும், அறிவுசார் நேர்மையும் தான். ஊழலை சுட்டிக்காட்டும் இந்த வழக்கின் உண்மைத்தன்மையானது, அரசியலமைப்பின் பிரிவு 124, பிரிவு 217 மற்றும் 218ன் அம்சங்களை மீறுவதாக உள்ளது.
முன்மொழிவு எனவே, தீவிர விசாரணைக்கு உரிய தகுதியான வழக்கு இது. இது போன்ற விஷயத்தில், பார்லிமென்ட் ஒரே குரலில் பேச வேண்டும்.
'எனவே, தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதியிடம் ஒரு பிரதிநிதித்துவத்தை சமர்ப்பிக்க, இந்த தீர்மானத்தை முன்மொழிகிறோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முன்மொழிவு, லோக்சபா விதிகளின்படி இருப்பதால் அங்கீகரிக்கிறேன். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படுகிறது.
அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி அர்விந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இந்த குழுவின் அறிக்கையின்படி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.