ADDED : ஜூன் 02, 2024 08:46 AM

அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ என காத்திருக்க, லோக்சபா செயலகமோ புதிய எம்.பி.,க்களை வரவேற்க, தயார் நிலையில் உள்ளது. லோக்சபா செகரட்ரி ஜெனரல் உட்பல் குமார் தலைமையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே எம்.பி.,யாக இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசு பங்களாக்கள் இருக்கும்.
எனவே அவர்கள் அதில் தங்கலாம். ஆனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள், அவர்களுடைய மாநில அரசு இல்லங்களில் அல்லது டில்லியில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவர்; இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
லோக்சபா செயலகத்தில் காகிதங்கள் வாயிலாக நடைபெறும் வேலைகள், தற்போது ஆன்லைனில் நடக்கின்றன. புதிய எம்.பி.,க்கள் லோக்சபா செயலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான சாப்ட்வேர் தயாராகி விட்டது; அதில், எம்.பி.,க்களின் சொந்த விபரங்கள் பதிவு செய்யப்படும். இதை வைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் மருத்துவ அட்டையும் தரப்படும்.