UPDATED : ஜூன் 13, 2024 08:29 PM
ADDED : ஜூன் 13, 2024 08:05 PM

புதுடில்லி: வரும் 26-ம் தேதி பார்லிமென்ட் லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளன.
18வது லோக்சபாவின் முதல் கூட்ட தொடர், வரும் 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களில், எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளனர். இதில், 26ம் தேதி லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என இன்று (13.06.2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் நாற்காலிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.
பா.ஜ.,கூட்டணி அரசில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கிய கூட்டணி கட்சிகளாக உள்ளன.
சபாநாயகர் பதவியை, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்க்கின்றன. அதே நேரத்தில் முக்கிய கட்சியான பா.ஜ., சபாநாயகர் பதவிக்கான போட்டியில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளான ‛ இண்டியா கூட்டணி' பொது வேட்பாளரை நிறுத்திட தீவிரம் காட்டி வருகிறது. லோக்சபாவில் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியமானது. அதை எப்படியாவது பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் முயற்சிக்கின்றன.