ADDED : அக் 26, 2024 03:59 AM

மைசூரு: 'முடா' முறைகேடு வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் நேற்று நான்கு மணி நேரத்துக்கு மேல், லோக் ஆயுக்தா போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன், நிலத்தை இவர்களுக்கு விற்பனை செய்த தேவராஜ் ஆகியோர் மீது, லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வழக்கில், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முதல்வரின் மனைவி பார்வதிக்கு, விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் மைசூரு முடா அலுவலகத்திற்கு, பார்வதி சத்தமே இல்லாமல் வந்தார். அவரிடம், லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நான்கு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடந்தது.
நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை பற்றி, லோக் ஆயுக்தா அலுவலக ஊழியர்களுக்கு கூட தெரியவில்லை.
'இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையாவிடம் விரைவில் விசாரணை நடக்கும்' என, லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.