ADDED : பிப் 01, 2025 12:16 AM

பெங்களூரு உட்பட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக, சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக அரசு அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்தன. இதன்படி, நேற்று லோக் ஆயுக்தா போலீசார், பெங்களூரு உட்பட மாநிலத்தில் ஏழு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
பெங்களூரு, பெலகாவியில் தலா இரண்டு இடங்கள், சித்ரதுர்கா, பாகல்கோட், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபரம் வருமாறு:
மாதவ் ராவ், மண்டல பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர், பெங்களூரு மாநகராட்சி
டி.கே.ரமேஷ், பஞ்சாயத்து ராஜ் துணை செயலர்
சச்சின், பதிவு மற்றும் முத்திரைத் துறை துணை பதிவாளர்
சஞ்சய் அன்னப்பா, கால்நடை ஆய்வாளர்
ஹெரோகேரி கிராம பஞ்சாயத்து பி.டி.ஓ., சிவலிங்கையா ஹிரேமத்
இந்த அதிகாரிகளுக்குச் சொந்தமான வீடுகள் உட்பட பல இடங்களில் நேற்று காலை முதல் தீவிர சோதனை நடந்தது.
இச்சோதனை குறித்து லோக் ஆயுக்தா உதவி எஸ்.பி., வம்சி கிருஷ்ணா கூறுகையில், ''லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக சேர்த்த பணமோ, சொத்துக்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன,'' என்றார்.
- நமது நிருபர் -