சொகுசு கார்கள் வாங்கும் முடிவை கைவிட்டது 'லோக்பால்' அமைப்பு
சொகுசு கார்கள் வாங்கும் முடிவை கைவிட்டது 'லோக்பால்' அமைப்பு
ADDED : ஜன 02, 2026 01:18 AM

புதுடில்லி: 'லோக்பால்' அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக, 5 கோடி ரூபாய் மதிப்பில், சொகுசு கார்கள் வாங்கப்பட உள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
அரசு உயரதிகாரிகள், ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, 2014ல் உருவாக்கப்பட்ட லோக்பால் அமைப்பு, 2019 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
சர்ச்சை
இதில், தலைவர், ஆறு உறுப்பினர்கள் என, மொத்தம் ஏழு பேர் உள்ளனர். இதன் செலவுக்காக, 2025 - 26ம் நிதியாண்டில், 44.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அந்த நிதியில் இருந்தே லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதியாக செயல்படும் தலைவர், நீதிபதிகளாக பதவி வகிக்கும் உறுப்பினர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன.
அந்த வகையில், ஏழு பேருக்கும் தனித்தனியாக ஏழு பி.எம்.டபிள்யு., கார்கள் வாங்க, கடந்த ஆண்டு அக்., 20ல் டெண்டர் கோரப்பட்டது.
ஒரு காரின் விலை, 70 லட்சம் ரூபாய் என்ற வகையில் ஏழு கார்களுக்கு, 5 கோடி ரூபாய் வரை செலவிட முடிவு செய்யப்பட்டது.
லோக்பால் அமைப்பின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், 10 சதவீதத்தை வாக னங்கள் வாங்குவதற்கே செலவு செய்வதா என, சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, கடந்த டிச., 17ல், சொகுசு கார்களை வாங்கும் முடிவு கைவிடப்பட்டது.
வாகன செலவுகளுக்காக, 2023 - 24 பட்ஜெட்டில், லோக்பால் அமைப்புக்கு, 12 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை மீறி, மிக ஆடம்பரமான வகையில் வாகனங்களுக்காக 5 கோடி ரூபாய் வரை செலவிட முயன்றது, சலசலப்பை ஏற்படுத்தியது.
வேதனை
இதுகுறித்து முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி கூறுகையில், ''பிரதமர் மோடி சுதேசி பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும்படி வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதை புறந்தள்ளிவிட்டு லோக்பால் அமைப்பு வெளிநாட்டு கார்களை வாங்க விரும்புகிறது. இது வேதனை அளிக்கிறது,'' என்றார்.

