லோக்சபா தேர்தலுக்காகவே 'இண்டி' கூட்டணி : சரத் பவார்
லோக்சபா தேர்தலுக்காகவே 'இண்டி' கூட்டணி : சரத் பவார்
ADDED : ஜன 14, 2025 11:05 PM

மும்பை : ''லோக்சபா தேர்தலுக்காகவே, 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டது,'' என, தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு சரத் பவார் குறிப்பிட்டார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., ஆகியவை, தேசிய அளவில் 'இண்டி' கூட்டணியிலும், மாநிலத்தில், 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி என்ற பெயரிலும் செயல்படுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், இந்த கூட்டணி படுதோல்வி அடைந்ததில் இருந்து, கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனித்து போட்டியிடப் போவதாக, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அறிவித்துள்ளது.
மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள அவர், காங்., - தேசியவாத காங்கிரசிடம் கலந்து ஆலோசிக்காமல் முடிவை அறிவித்தார்.
இந்நிலையில், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் தலைவர் சரத் பவார் கூறுகையில், ''லோக்சபா தேர்தலுக்காகவே இண்டி கூட்டணி உருவாக்கப்பட்டது. சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எந்த பேச்சும் நடக்கவில்லை,'' என்றார்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக சமீபத்தில் உத்தவ் தாக்கரே அறிவித்த நிலையில், தற்போது அதே பாணியில் சரத் பவாரும் மறைமுகமாக பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.