ஏர்போர்ட்டில் அதிக நேரம் 'பார்க்கிங்': அபராதம் விதிக்க முடிவு
ஏர்போர்ட்டில் அதிக நேரம் 'பார்க்கிங்': அபராதம் விதிக்க முடிவு
UPDATED : ஜூலை 08, 2024 04:26 PM
ADDED : ஜூலை 08, 2024 04:18 PM

பெங்களூரு: பெங்களூருவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், அதிக நேரம் வாகனத்தை நிறுத்தினால், அபராதம் விதிக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
பெங்களூருவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலையத்தில் பயணியரை ஏற்றவும், இறக்கிவிடவும் தினமும் நுாற்றுக்கணக்கான டாக்சிகள், வாகனங்கள் வருகின்றன. இரவு நேரத்தில் வரும் வாகனங்கள், மணிக்கணக்கில் அங்கேயே நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணியரும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், இத்தகைய முடிவுக்கு விமான நிலைய ஆணையம் வந்துள்ளது. தனியார் வாகனங்கள், ஏழு நிமிடம் வரை நிறுத்த அனுமதி உள்ளது. அதன் பின்னும் நிறுத்தியிருந்தால், அபராதம் வசூலிக்கப்படும். 10 நிமிடம் நிறுத்தும் வாகனங்களுக்கு 150 ரூபாய்; 14 நிமிடம் வரை நிறுத்தினால் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 15 நிமிடத்துக்கும் மேலாக, வாகனம் நிறுத்தியிருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இந்த விதிமுறையை எப்போது செயல்படுத்துவது என, விமான நிலைய ஆணையம் இன்னும் முடிவு செய்யவில்லை. இதுதொடர்பாக, அரசின் அனுமதியை கேட்டுள்ளது. 'முனையம் 1' மற்றும் 'முனையம் 2'ல், விதிமுறை செயல்படுத்தப்படலாம். விமான நிலையத்துக்கு வரும் பஸ்களுக்கு 600 ரூபாய்; டெம்போ டிராவலர்களுக்கு 300 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்க ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.