'உங்க வேலையை பாருங்க': ஆதரவளித்த பாக்., மாஜி அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி
'உங்க வேலையை பாருங்க': ஆதரவளித்த பாக்., மாஜி அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி
ADDED : மே 25, 2024 03:01 PM

புதுடில்லி: சமூக வலைதளத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாவத் சவுத்ரி கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால், பாவத் சவுத்ரி அவரின் நாட்டு நலனை பற்றி கவனம் செலுத்தட்டும் எனக்கூறியுள்ளார்.
லோக்சபாவுக்கு 6வது கட்டமாக தேர்தல் இன்று( மே 25) தேர்தல் நடக்கிறது. டில்லியில் இன்று முதல்வர் கெஜ்ரிவால் ஓட்டுப் போட்டார். பிறகு அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் '' நானும் எனது தந்தையும், மனைவியும் ஓட்டுப்போட்டோம். எனது தாயார் உடல்நலக்குறைவால் ஓட்டுப்போடவில்லை. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக ஓட்டளித்தோம்'' என பதிவிட்டு இருந்தார்.
இதனை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாவத் சவுத்ரி வெளியிட்ட பதிவில், '' பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு பேச்சுகளை அமைதியும் சமூக நல்லிணக்கமும் தோற்கடிக்கட்டும்'' எனக்கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: எங்கள் நாட்டு பிரச்னையை கையாளும் திறன் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தானின் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. எனவே உங்கள் நாட்டு நலனில் அக்கறை செலுத்துங்கள். தேர்தல் எங்களின் உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்தின் பெரிய ஆதரவாளர்கள் அதில் தலையிடுவதை ஏற்க முடியாது'' எனக்கூறியுள்ளார்.

