பாக்.,கிற்கு பி.ஆர்.ஓ., வேலை பார்ப்பதா? மத்திய அமைச்சர் கண்டனம்
பாக்.,கிற்கு பி.ஆர்.ஓ., வேலை பார்ப்பதா? மத்திய அமைச்சர் கண்டனம்
ADDED : மே 11, 2024 03:41 AM

புதுடில்லி: பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:
மணிசங்கர் மற்றும் சாம் பிட்ரோடா போன்றோரின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும், காங்கிரசின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை அப்படியே பிரதிபலிக்கின்றன.மணிசங்கர் அய்யரை பொறுத்தவரையில் அவர் எப்போதுமே பாகிஸ்தானுக்கு பி.ஆர்.ஓ., வேலை செய்கிறவர்.
பாகிஸ்தானை பார்த்து அச்சம் கொள்ள வேண்டுமென்று நமக்கு பரிந்துரை செய்கிறார்.பாகிஸ்தானை மதிக்க வேண்டுமென்றும் கூறுகிறார். அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாடு இப்போது முன் போல இல்லை. இது புதிய இந்தியா. யாருக்கும் அஞ்ச மாட்டோம். யாரைப் பார்த்தும் பயந்து ஓடவும் மாட்டோம்.
ராகுலின் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், பாகிஸ்தானின் தீவிரவாதச் செயல்களுக்கு அடிக்கடி மன்னிப்பு கோரும் கட்சியாகவும், அந்நாட்டின் பாதுகாவலாளியாகவும் மாறிவிட்டது. இப்போதும்கூட மணிசங்கர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காது. மாறாக, 'அவரது பேச்சு ஏற்புடையதல்ல. அந்த கருத்துக்களுக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை. அது, அவரது சொந்த கருத்து' எனக் கூறி நழுவிக் கொள்வர். இதுவே அவர்களின் வழக்கம்.
கடந்த 2019ல், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து சாம் பிட்ரோடாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'தீவிரவாத சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கும். அவற்றில் என்ன புதிதாக இருந்துவிட முடியும்' என, அலட்சியமாக கூறினார்.சமீபத்தில் கூட, மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் விஜய் வடேடிவர், 'மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது, ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் கர்கரேவை சுட்டுக் கொன்றது அஜ்மல் கசாப் அல்ல; ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு நிலைப்பாடு உடைய ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தான் சுட்டுக் கொன்றார்' என்றார்.
'மும்பை தாக்குதல் பயங்கரவாத சம்பவமே அல்ல. அது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சதி வேலை' என, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் சமீபத்தில் தெரிவித்தார்.இப்போதுகூட காங்., - எம்.பி., ராகுலை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பாராட்டிப் பேசியதையும் பார்த்தோம். ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் எந்த காரியத்தையும் செய்ய துணிந்துவிட்டது.
இந்த லோக்சபா தேர்தலில், கேரளாவிலும், கர்நாடகாவிலும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இண்டியா' மற்றும் எஸ்.டி.பி.ஐ., போன்ற அமைப்புகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.