ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா, கணவருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்
ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா, கணவருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்
ADDED : செப் 06, 2025 12:34 AM

மும்பை: மும்பையை சேர்ந்த வர்த்தகரிடம், 60 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, மும்பை போலீசார், 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர், 'பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். வர்த்தகத்தை விரிவு படுத்துவதாக கூறி, மும்பை வர்த்தகர் தீபக் கோத்தாரியிடம் கடந்த 2015 முதல் 2023 வரை 60 கோடி ரூபாயை ஷில்பா பெற்றுள்ளார்.
கடனாக பெற்ற இந்த தொகையை, வரி சேமிப்பு என்ற பெயரில் ஷில்பா தம்பதி முதலீடாக காட்டியுள்ளனர். மேலும் அவ்வாறு பெற்ற பணத்தை தங்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மும்பை வர்த்தகர் கோத்தாரி கூறுகையில், 'என்னிடம் வாங்கிய பணத்துக்கு, 12 சதவீத வட்டி தருவதாக கூறிய ஷில்பா, சில மாதங்களில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து எனக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஷில்பாவின் நிறுவனம் மீது, 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான திவால் வழக்கு நிலுவையில் உள்ளது' என்றார்.
இதையடுத்து, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஷில்பா ஷெட்டி தம்பதி மீது மும்பை போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த நடிகை ஷில்பா தம்பதி, இது அவதுாறு பரப்பும் நோக்கில் தங்கள் மீது போடப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற வழக்கு என்றனர்.
இந்நிலையில், ஷில்பா தம்பதி வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, 'லுக் அவுட்' நோட்டீஸ் எனப்படும், தேடப்படும் குற்றவாளி என்பதற்கான நோட்டீசை மும்பை போலீசார் பிறப்பித்துள்ளனர்.
இது குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், 'நடிகை ஷில்பா, மற்றும் அவரது கணவர் குந்த்ராவின் பயண விபரங்களை பதிவு செய்து வருகிறோம். அவர்களது நிறுவன கணக்கு தணிக்கையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்' என்றனர்.