ADDED : ஜன 11, 2024 11:25 PM
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு, நாட்டு மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆலுாரில் பாறை மீது ராமரின் பாதம் தரிசனம் அளித்துள்ளதால், பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.
ஹாசன், ஆலுா,ரில், காகனுார் கிராமத்தின் அருகில், பாறை மீது ஸ்ரீராமனின் பாத அடையாளம் தென்படுகிறது. இந்த கிராமத்தின் அருகில், ஹேமாவதி ஆறு பாய்கிறது. தற்போது ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், பாறைகள் தென்படுகின்றன.
மக்கள் பாறை மீது படிந்த மண், துாசியை அப்புறப்படுத்திய போது, ராமரின் பாதங்கள் தரிசனம் தந்தன. அது மட்டுமின்றி, ஆஞ்சனேயர் பாதம், சிவலிங்கமும் காட்சி அளிக்கின்றன.
சீதையை கடத்தி சென்ற இலங்கேஸ்வரன் ராவணனை வதம் செய்த பின், ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கிறது. அதை நிவர்த்தி செய்து கொள்ள வழி தேடி, ராமர் லோக சஞ்சாரம் செய்தார். அப்போது ஹாசனுக்கு வந்தார். இவ்வேளையில், பாறை மீது சிவலிங்கத்தை செதுக்கி பூஜித்ததால், ராமனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாக ஐதீகம்.
ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால், இதுவரை ராமர் பாதங்களை தரிசிக்க முடியவில்லை. தற்போது நீர் மட்டம் குறைந்ததால், தரிசனம் கிடைத்துள்ளது.
பாறை மீது ராமரின் பாதம் தெரிகிறது என்ன தகவல், காட்டுத் தீ போன்று பரவியால், பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து பாறையை பூஜிக்கின்றனர். ராமர் தங்கிய இந்த இடத்தை, திருத்தலமாக்க வேண்டும் என, அரசிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
'அயோத்தியில் ராமர் கோவில் திறக்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாறையில் ராமர் பாதம் தரிசனம் தந்தது, சுப சகுனம். இது ஆச்சரியமான விஷயம்' என, கருதுகின்றனர்
- நமது நிருபர் -.