கருணை காட்டினார் வருண பகவான்; கணிசமாக குறைந்தது காற்று மாசு!
கருணை காட்டினார் வருண பகவான்; கணிசமாக குறைந்தது காற்று மாசு!
UPDATED : ஆக 09, 2024 11:41 AM
ADDED : ஆக 09, 2024 11:32 AM

புதுடில்லி: டில்லியில் 6 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக காற்று மாசுபாடு சற்று குறைந்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காற்று மாசுபாடு
தலைநகர் டில்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகளவில் இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, 2018 முதல் 2024 வரையில் ஒருநாள் கூட காற்றின் தரம் சகஜநிலையில் இருந்ததில்லை.
அளவீடு
அதாவது, காற்றின் தரக் குறியீட்டில் பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் சிறப்பானதாகவும், 51 முதல் 100 வரையில் திருப்திகரமானதாகவும் கருதப்படுகிறது. தரக்குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் சுமாரான மாசு என்றும், 201 முதல் 300 வரையில் மோசமானதாகவும், 301 முதல் 400 படுமோசமானதாகவும், 401 முதல் 500 வரையில் அதி தீவிரமான மாசு என்றும் கருதப்படுகிறது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த 6 ஆண்டுகளில் தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு தீவிரமாகத்தான் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், டில்லியில் காற்றின் தரக்குறியீடு 53 ஆக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், டில்லியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை தான் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மழை
டில்லியில் கடந்த ஜூன் 1 முதல் ஆக.,1 வரையில் 55.46 செ.மீ., மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.