'சக்தி' திட்டத்தால் நஷ்டம்? ராமலிங்க ரெட்டி விளக்கம்!
'சக்தி' திட்டத்தால் நஷ்டம்? ராமலிங்க ரெட்டி விளக்கம்!
ADDED : ஜன 26, 2025 11:03 PM

ராம்நகர்: 'சக்தி திட்டத்தால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை,'' என்று, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும் சக்தி திட்டத்தை நாங்கள் திறம்பட செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்தால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பா.ஜ., ஆட்சியில் போக்குவரத்து துறைக்கு 5,900 கோடி ரூபாய் கடன் இருந்தது. நாங்கள் அந்த கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் புதிய பஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ராம்நகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் எம்.பி., சுரேஷ் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பட்ஜெட்டில் மாவட்ட வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
மாவட்டத்தில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூடிய விரைவில் கலெக்டர், என்னிடம் அறிக்கை கொடுப்பார்.
ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிப்பார். லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராவார். ஸ்ரீராமுலு காங்கிரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக அரசியல் செய்கிறார்.
ஸ்ரீராமலுவும், ஜனார்த்தன ரெட்டியும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி வீசுகின்றனர். எங்கள் கட்சியில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை. நாங்கள் யாரையும் அழைக்கும் அவசியமும் ஏற்படவில்லை.
ஆனால், எங்கள் பக்கம் வர நினைப்பவர்கள் தாராளமாக வரலாம். அனைவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது. பதவி மீது ஆசைப்படுவது தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

