தலைவரின் மனைவியுடன் காதல்: ரவுடிக்கு தாதா கும்பல் 'ஸ்கெட்ச்'
தலைவரின் மனைவியுடன் காதல்: ரவுடிக்கு தாதா கும்பல் 'ஸ்கெட்ச்'
ADDED : ஜூலை 06, 2025 11:10 PM
நாக்பூர்: மஹாராஷ்டிராவில் தங்கள் தலைவரின் மனைவியை காதலித்து வந்த ரவுடியை, தாதா கும்பல் கொலை வெறியுடன் தேடி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில், 'இப்பா தாதா' என்ற ரவுடி கும்பல் செயல்படுகிறது.
சிகிச்சை
இந்த கும்பலைச் சேர்ந்த அர்ஷத் டோபி என்ற ரவுடி, கும்பலின் தலைவர் இர்பான் கான் எனப்படும் இப்பாவின் மனைவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி வெளியே ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர்.
சமீபத்தில், தன் காதலியான கும்பலின் தலைவரின் மனைவியுடன், அர்ஷத் டோபி பைக்கில் சென்றார்.
நாக்பூரின் காம்ப்டி என்ற பகுதியில் சென்றபோது, ஜே.சி.பி., வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில், அர்ஷத் டோபிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரது காதலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவரை அர்ஷத் டோபி அழைத்துச் சென்றார்; அங்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர்.
தொடர்ந்து, வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கும் சிகிச்சை அளிக்க மறுக்கவே, நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
படுகாயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவல், இப்பா தாதா கும்பலுக்கு சென்றது. தலைவரை பழிவாங்கவே, அவரது மனைவியை கடத்திச் சென்று கொலை செய்து விட்டு, சாலை விபத்தில் உயிரிழந்ததாக அர்ஷத் டோபி நாடகமாடுவதாக, இப்பா தாதா கும்பலைச் சேர்ந்த மற்ற ரவுடிகள் நம்பினர்.
வழக்குப்பதிவு
இதையடுத்து, அர்ஷத் டோபியை கண்டுபிடித்து கொலை செய்ய நாக்பூரின் நாலாபுறமும், 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் தேடினர்.
இதையறிந்த அர்ஷத் டோபி, பர்டியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததைக் கூறினார். உடனே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், சாலை விபத்தில் அந்த பெண் உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.