ADDED : ஜன 12, 2025 11:48 PM

புதுடில்லி: 'வாரத்தில் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என எல் அண்ட் டி., தலைவர் சுப்ரமணியன் கூறியுள்ள கருத்துக்கு, பிரபல தொழிலதிபர்கள் ஆனந்த் மஹிந்திரா, அடார் பூனாவாலா எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எல் அண்ட் டி., நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன், 'வாழ்க்கையில் வெற்றிபெற வாரத்தில், 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
'ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் எவ்வளவு நேரம் தான் மனைவியின் முகத்தை உற்று பார்ப்பீர்கள்.
'அலுவலகம் சென்று வேலை செய்யுங்கள்' என, கூறினார். இது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
ஆட்டோமொபைல் உட்பட பல துறைகளில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, 'என் மனைவி அருமையானவர். அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்' என, பதிவிட்டுள்ளார்.
இதை பகிர்ந்து, மருந்து தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ள 'சீரம் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, 'ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளது சரி. என் மனைவியும் மிகவும் சிறந்தவர். ஞாயிற்றுக்கிழமைகளில் என்னை பார்த்துக் கொண்டிருக்க அவர் விரும்புகிறார்.
'எவ்ளவு மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதைவிட, எந்தளவுக்கு தரமான வேலை செய்கிறோம் என்பதே முக்கியம்' என கூறியுள்ளார்.