'நம்ம கிளினிக்'குகளில் நோயாளிகள் வருகை குறைவு!: டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வர தயக்கம்
'நம்ம கிளினிக்'குகளில் நோயாளிகள் வருகை குறைவு!: டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வர தயக்கம்
ADDED : நவ 15, 2024 11:03 PM

பெங்களூரு: மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நல்ல நோக்கில், பெங்களூரில் 'நம்ம கிளினிக்'குகளை மாநில அரசு திறந்தது. ஆனால் உரிய டாக்டர்கள் நியமிக்கப்படாததால், இங்கு வருவதற்கு நோயாளிகள் தயங்குவது மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர்.
மக்களுக்கு, சரியான நேரத்தில், தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று கருதி, பெங்களூரில் 'நம்ம கிளினிக்'குகளைத் திறக்க, மாநில அரசு திட்டமிட்டது. 2022ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, 222 'நம்ம கிளினிக்'குகளை அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
இந்த கிளினிக்குகளில், காய்ச்சல், சளி, இருமல், உட்பட, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, ஸ்கேனிங், எக்ஸ்ரே வசதிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டன. இங்கு இலவசமாக சிகிச்சை கிடைத்ததால், நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
ஆரம்பத்தில் அனைத்து கிளினிக்குகளிலும் நோயாளிகள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆனால் நாளடைவில் பல கினினிக்குகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் துவங்கியது. இது மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
பெங்களூரின் 'நம்ம கிளினிக்'குகளின் செயல் திறனை அறியும் நோக்கில், மாநகராட்சியின் சுகாதார பிரிவு அதிகாரிகள், நடப்பாண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் வரை ஆய்வு செய்தனர். அப்போது தான் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக, மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆர்.ஆர்.நகர் மண்டலம், தலகட்டபுராவின், 'நம்ம கிளினிக்'கில் கடந்த ஏழு மாதங்களில், தினமும் சராசரியாக தினமும் ஒரு நோயாளி மட்டும் சிகிச்சை பெற்றுள்ளார். ஏழு மாதங்களில் 203 நோயாளிகள் 'நம்ம கிளினிக்'கில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பொம்மனஹள்ளியின் ஆர்.பி.ஐ., லே - அவுட்டில் உள்ள 'நம்ம கிளினிக்'கில் சராசரியாக தினமும் ஒன்பது பேரும், விநாயகா நகர் லே - அவுட் கிளினிக்கில் ஆறு நோயாளிகளும், கிழக்கு மண்டலத்தின் கோனேன அக்ரஹாராவின் கிளினிக்கில் நான்கு பேரும், புலிகேசி நகரின் கிளினிக்கில் ஒன்பது பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மஹாதேவபுரா தொட்டனகுன்டியின் கிளினிக்கில் ஆறு பேரும், முன்னேனகோலளு கிளினிக்கில் ஏழு பேர், தெற்கு மண்டலத்தின் சிக்பேட்டை கிளினிக்கில் ஐந்து பேரும், லக்கசந்திரா கிளினிக், எலஹங்காவின், அம்ருத்ஹள்ளியின் கிளினிக்கில் தலா ஒன்பது பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நகரின் 222 'நம்ம கிளினிக்'குகளில், தினமும் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் வரும், ஒரே ஒரு கிளினிக் பொம்மனஹள்ளியின் ரூபேன அக்ரஹாராவில் உள்ள கிளினிக் மட்டுமே.
இந்த கிளினிக்கில் தினமும் சராசரியாக 53 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 63 கிளினிக்குகளுக்கு தினமும் 10 முதல் 19 நோயாளிகளும், 106 கிளினிக்குகளுக்கு 20 முதல் 29 பேரும், 29 கிளினிக்குகளுக்கு 30 முதல் 39 பேரும், 13 கிளினிக்குகளுக்கு, 40 முதல் 49 பேரும் சிகிச்சை பெற வருகின்றனர்.
'நம்ம கிளினிக்'கில் அனைத்து அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன. நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சில இடங்களில் டாக்டர்கள் இல்லை. நர்ஸ்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் நோயாளிகள், சிகிச்சைக்கு வர தயங்குவது தெரிய வந்துள்ளது.
தற்போது இத்தகைய கிளினிக்குகளுக்கு, டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் இருந்தாலும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ள கிளினிக்குகளில், டாக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 'நம்ம கிளினிக்'குகளின் பணியாற்றும் டாக்டர்களின் ஊதியம் 60,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிளினிக்குகளில் மருந்துகள் சேகரிக்க, குளிர்ச்சாதன பெட்டிகள், கண்காணிப்பு கேமரா, எல்.இ.டி., திரை உட்பட, தேவையான அடிப்படை வசதிகள் செய்கிறோம். வரும் நாட்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

