ADDED : செப் 10, 2025 12:18 AM

பாலக்காடு; கேரள மாநிலத்தில் குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதாக, மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கேரள மாநில சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்த பிரசவங்களில், ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை 2.5 கிலோவுக்கு கீழ் எடையுடன் இருந்ததாக குறிப்பிடடுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: மாநிலத்தில் சிசு மரண விகிதம் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகள் எடை குறைவாக பிறப்பது அதிகரித்துள்ளது.
பொதுவாக, குழந்தைகள் எடை, 2.5 கிலோ முதல் 3.5 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
இதில் குறைவு ஏற்படும் போது சுகாதார பிரச்னைகள் உருவாகிறது. இது, குழந்தைகளின் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கூடுதல் கவனிப்பு இருந்தால் மட்டுமே குழந்தையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்.கர்ப்பிணிகளுக்கு ஏற்படும், ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைமாத பிரசவம் போன்றவையே, பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த, 2023ல் 1.2 லட்சம் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்பட்டுள்ளது. குறைமாத பிரசவங்கள் 26,968 நடந்துள்ளது.
சுத்தமான தண்ணீரின்மை, சுகாதாரமின்மை, கர்ப்பணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, மனஅழுத்தம், வாழ்க்கை முறை, நோய் ஆகியவை பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாக இருப்பதற்கு கூடுதல் காரணமாகும்.
பொதுவாக, பழங்குடியின பெண்கள் பிரசவிக்கும் போது, எடை குறைவாக குழந்தை பிறக்கும். தற்போது, அனைத்து தரப்பிலும், சிசு எடை குறைவாக காணப்படுவது கவலை அளிக்கிறது.
இதை மதிப்பிட்டு, பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கவும், கர்ப்பிணிகளுக்கு உடல் பரிசோதனைகள் செய்யவும் சுகாதாரத் துறை திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.