சிறிய கார்களுக்கு சிறப்பான எதிர்காலம்; மவுசு மீண்டும் வரும் என மாருதி கணிப்பு
சிறிய கார்களுக்கு சிறப்பான எதிர்காலம்; மவுசு மீண்டும் வரும் என மாருதி கணிப்பு
ADDED : ஆக 28, 2024 08:05 AM

புதுடில்லி: '2 ஆண்டுகளில் சின்ன கார்களுக்கு மீண்டும் மவுசு அதிகரிக்கும்,' என மாருதி நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சி.பார்கவா தெரிவித்தார்.
நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ஆர்.சி.பார்கவா பேசியதாவது: ஹரியானா புதிய உற்பத்தி ஆலை 2025-26க்குள் செயல்பட துவங்கும். இந்தியாவிற்கு குறைந்த விலையில் சிறிய கார்கள் அவசியம் தேவைப்படுகிறது. பட்ஜெட் கார்கள் பிரிவை விரும்பும் வாடிக்கையாளர்கள் இன்னும் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
2 ஆண்டுகளில் பாருங்கள்!
மாருதி நிறுவனமானது சிறிய கார்கள் பிரிவில் தொடர்ந்து புதிய கார்களை விற்பனை செய்யும். தற்போது சிறிய கார்கள் தேவை பின்னடைவில் இருப்பது உண்மை தான். ஆனால், 2 ஆண்டுகளில் சிறிய கார்களுக்கான டிமாண்ட் புத்துயிர் பெறும். நிச்சயமாக மீண்டும் மவுசு அதிகரிக்கும். குஜாராத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட் திறன் கொண்ட புதிய ஆலையை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இ.வி., மாடல்
உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாருதி நிறுவனம் 2வது உற்பத்தி ஆலையை குஜராத்தில் அமைக்க ரூ.35,000 கோடி முதலீடு செய்யும். இந்தியாவில் தொடர்ந்து அதிக ஆடம்பர வாகனங்களை மட்டும் விற்பனை செய்ய முடியாது. 2030-31ம் ஆண்டுக்குள் ஆறு புதிய மடல்கள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். முதலாவது இ.வி மாடல் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.
இலக்குகள்
ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும். மாருதி நிறுவன சேவையின் பலன்களை கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வசிக்கும் மக்களும் அடைய வேண்டும்.
பெரிய சந்தை
பல ஆண்டுகளாக மின்சார வாகனங்கள் தேவை அதிகரித்து வருகிறது. ஜப்பானில் உள்ள Suzuki உடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் வளர்ச்சியை எவ்வாறு வலுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

