தீபாவளி ஸ்பெஷல் ரயில்களுக்கு வரவேற்பு இல்லை; சென்னை-கோட்டயம் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து
தீபாவளி ஸ்பெஷல் ரயில்களுக்கு வரவேற்பு இல்லை; சென்னை-கோட்டயம் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து
ADDED : அக் 21, 2025 09:26 AM

சென்னை: எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்ட சென்னை சென்ட்ரல்-கோட்டயம் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்காக மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் மற்றும் செங்கோட்டை இடையே முதலில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் சேவையானது, கோட்டயம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் அக்.1, 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்கள் புனலூர், கொட்டாரக்கரா, கொல்லம் மற்றும் செங்கனூரில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே கூறியிருந்தது.
தெற்கு ரயில்வே எதிர்பார்த்தபடி, அக்டோபர் 1ம் தேதி முதல் பயணிகள் முழுமையாக முன்பதிவு செய்திருந்தனர். தீபாவளி நேரத்தில் கூட்ட நெரிசல் இருந்த போதிலும், அடுத்தடுத்த பயணங்களின் போது இந்த கூட்டம் குறைவாக காணப்பட்டது.
மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும் இந்த ரயில் சேவையில் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பார்த்த படி பயணிகள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, சென்னை சென்ட்ரல்-கோட்டயம் இடையே அக்.22ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06121) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதேபோன்று, அக்.23ம் தேதி மறு மார்க்கமாக கோட்டயம்-சென்னை சென்ட்ரல் ரயில் சேவையும் (06122) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.