ADDED : அக் 18, 2024 07:33 AM

பெங்களூரு: பெங்களூரில் காய்கறிகளின் விலை, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. சில நாட்களுக்கு விலை உயர்வு நீடிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். விளைச்சல் பாழாவதால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். மற்றொரு பக்கம் காய்கறிகள் விலை ஏறுமுகமாக உள்ளது. பெங்களூருக்கு வரத்து குறைந்ததால், விலை அதிகரிக்கிறது.
தக்காளி, பீன்ஸ், பீட்ரூட், பச்சை மிளகாய், பூண்டு, பாகற்காய், காலிபிளவர் என, பல காய்கறிகளின் விலை, 60 - 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. முள்ளங்கி, கத்தரிக்காய், முட்டைகோஸ் மட்டுமே, 50 ரூபாய்க்குள் கிடைக்கிறது. பூண்டு விலை தரத்துக்கு தக்கபடி, 320 முதல் 440 ரூபாய் வரை உள்ளது.
'தீபாவளி, கார்த்திகை மாதம் நெருங்குவதால், சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். திருவிழாக்கள், உற்சவங்கள் நடக்கும். கோவில்களில் அன்னதானம் நடக்கும். காய்கறிகளின் தேவை அதிகமாகும். எனவே, இவற்றின் விலை மேலும் அதிகரிக்கும்' என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்கறிகள் விலை உயர்வால், உணவகங்களில் உணவு, சிற்றுண்டி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. காய்கறிகள் விலை உயர்வால், 29 சதவீதம் மக்கள், காய்கறி வாங்கும் அளவை குறைத்துள்ளனர். உணவு பழக்கத்தை மாற்றியதாக, ஆய்வறிக்கை கூறுகிறது.