குரலை தாழ்த்துங்க; என்ன மிரட்டுறீங்களா?' வக்கீலிடம் கொந்தளித்த தலைமை நீதிபதி
குரலை தாழ்த்துங்க; என்ன மிரட்டுறீங்களா?' வக்கீலிடம் கொந்தளித்த தலைமை நீதிபதி
ADDED : ஜன 03, 2024 11:42 PM

புதுடில்லி, நீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவது தொடர்பாக குரலை உயர்த்தி, அதிகார தோரணையில் வழக்கறிஞர் பேசியதால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ''குரலை தாழ்த்தி பேசுங்கள்; இப்படி பேசினால் நீதிபதிகள் பயந்துவிடுவர் என நினைக்கிறீர்களா?'' என, கண்டிப்புடன் எச்சரித்த சம்பவம் நேற்று அரங்கேறியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அறை எண்.1ல், வழக்கு விசாரணை நேற்று நடந்து கொண்டிருந்தது.
மன்னிப்பு
அப்போது, வழக்குகளை பட்டியலிடுவது தொடர்பாக, தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அந்த விவாதத்தின் போது குரலை உயர்த்தி, அதிகார தோரணையில் அந்த வழக்கறிஞர் பேசத் துவங்கியதும், தலைமை நீதிபதி சந்திரசூட் ஆவேசமானார். உடனடியாக குறுக்கிட்ட தலைமை நீதிபதி கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற அறை எண்.1ல் நின்றுகொண்டு நீங்கள் விவாதிக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் குரலை தாழ்த்துங்கள்; இல்லையெனில், நீதிமன்றத்தில் இருந்து உங்களை நீக்க வேண்டியிருக்கும். நீங்கள் எந்த நீதிமன்றத்தில் வழக்கமாக ஆஜராகிறீர்கள்? இப்படித் தான் நீதிபதிகளை பார்த்து உரக்கப் பேசுவீர்களா?
நீங்கள் குரலை உயர்த்திப் பேசினால் நீதிபதிகள் பயந்துவிடுவர் என நினைத்தால் அது தவறு. என் 23 ஆண்டு கால பணி அனுபவத்தில் அது நடந்தது இல்லை; கடைசி ஆண்டிலும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தன் செயலுக்கு அந்த வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்ற அறையில் இவ்வாறு கொந்தளிப்பது இது முதன்முறையல்ல.
வெளியேற்றம்
ஏற்கனவே ஒரு முறை நீதிமன்ற அறையில், மொபைல் போனில் பேசிய வழக்கறிஞரை கண்டித்ததுடன், அவரது மொபைல் போனை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் குரலை உயர்த்திப் பேசிய வழக்கறிஞர் விகாஸ் சிங் என்பவரை, நீதிமன்ற அறையில் இருந்து உடனடியாக வெளியேற்றிய சம்பவமும் கடந்த காலங்களில் அரங்கேறிஉள்ளது.