தேர்தலுக்கு தேர்தல் டெபாசிட் இழக்கும் வேட்பாளர்கள் அதிகரிப்பு
தேர்தலுக்கு தேர்தல் டெபாசிட் இழக்கும் வேட்பாளர்கள் அதிகரிப்பு
UPDATED : மார் 19, 2024 06:08 PM
ADDED : மார் 19, 2024 06:03 PM

புதுடில்லி: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1951 ல் முதல், 2019 வரை நடந்த பொதுத்தேர்தல்களில் மொத்தம் 71 ஆயிரம் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளது தேர்தல் ஆணையத்தின் தரவுகள் மூலம் தெரியவந்து உள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், டெபாசிட் தொகை செலுத்துவது அவசியம். அந்தந்த தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுகளில் 6 ல் 1 சதவீத ஓட்டுகள், அதற்கு மேல் பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை திருப்பித் தரப்படும். அதற்கு கீழ் குறைவான ஓட்டுகள் பெறும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்.
முதல் தேர்தல் நடந்த போது பொதுத்தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.500ம், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கான தொகுதிகளில் போட்டியிடுவோர் ரூ.250ம் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். தற்போது, இந்தத் தொகை முறையே ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ. 12,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு தேர்தலிலும் டெபாசிட் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 1951 முதல் 2019 வரை நடந்த லோக்சபா தேர்தல்களில் மொத்தம் 91,160 பேர் போட்டியிட்டனர். அதில், 71,246 பேர் டெபாசிட் இழந்தனர்.
2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மட்டும் 86 சதவீதம் பேர் டெபாசிட் இழந்தனர்.அதிகபட்சமாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 346 பேர் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சியின் 148 வேட்பாளர்கள், பா.ஜ.,வின் 51 பேர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் 41 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 1,874 பேரில் 745 பேர் டெபாசிட் இழந்தனர். 1996 ம் ஆண்டு நடந்த 11வது லோக்சபா தேர்தலின் போது 91 சதவீத வேட்பாளர்கள் அதாவது போட்டியிட்ட 13,952 பேரில் 12,688 பேரும்1991- 92 ல் நடந்த தேர்தலில் 8,749 பேரில் 7,539 (86 சதவீதம்) பேரும்,2009 ல் 8,070 பேரில் 6,829 பேர்( 85 சதவீதம்) பேரும்,2014ல் 8,251 பேரில் 7 ஆயிரம் பேரும்( 84 சதவீதம் பேரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

