50 ஆண்டு நீடித்த பிரச்னைக்கு தீர்வு கண்ட துணை நிலை கவர்னர்! அடுக்குமாடி தொழிற்கூடங்கள் உரிமம் வழக்குகள் முடித்து வைப்பு
50 ஆண்டு நீடித்த பிரச்னைக்கு தீர்வு கண்ட துணை நிலை கவர்னர்! அடுக்குமாடி தொழிற்கூடங்கள் உரிமம் வழக்குகள் முடித்து வைப்பு
UPDATED : அக் 13, 2026 04:05 PM
ADDED : அக் 13, 2026 03:54 PM

புதுடில்லி: டில்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டில்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே, 50 ஆண்டுகளாக தொடர்ந்த பிரச்னை, டில்லி துணை நிலை கவர்னர் தலையீட்டை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை செயல்படுத்தும் நடடைமுறையை இரு அமைப்புகளும் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட நிலையில், இவை தொடர்பான மேல் முறையீட்டு மனுக்களை டில்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், டில்லியில் 1970 மற்றும் 1980-களில் சுயநிதி திட்டத்தின் கீழ் தொழிற்கூடங்களை அமைப்பதற்காக டில்லி மேம்பாட்டு ஆணையம், டில்லி மாநில தொழில் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு நிலங்களை ஒதுக்கியது.
குத்தகை உரிமையில் இருந்து சில தொழிற்கூடங்கள் மற்றும் தொழிற்சாலை மனைகளை சொந்த உரிமையாக மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் வகையில், கடந்த 2005ல் டில்லி அரசு உரிமை மாற்றம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொழிற்கூடங்கள் பயனடைந்தன. ஆனால், டில்லி, கீர்த்தி நகர் பேக்கேஜிங் காம்ப்ளக்ஸில் உள்ள பல அடுக்குத் தொழிற்சாலை அலகுகளின் உரிமையாளர்கள், சமர்ப்பித்த விண்ணப்பங்களில் சிக்கல்கள் ஏற்பட்டன. இத்திட்டம் 'பிளாட்' பாணியிலான தொழிற்சாலைகளை உள்ளடக்கவில்லை என்றும், டில்லி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து குத்தகை நிர்வாகத்தை மாற்றும் பணி முழுமையடையவில்லை என்றும், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் கருதியது.
இந்நிலையில், கீர்த்திநகர் பேக்கேஜ் வளாகத்தில் ஒதுக்கீடு பெற்ற தொழிற்கூடங்கள், தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ல் டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதைத் தொடர்ந்து, தனி நீதிபதி, 2019 மே மாதம் பிறப்பித்த உத்தரவிடல், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகத்தின் நிலைப்பாடை உறுதி செய்தார். ஆனால், அப்பீல் வழக்கில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2023, மார்ச் மாதம், அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது.
'பல அடுக்கு கட்டடங்களில் அமைந்துள்ள தொழிற்கூடங்களை, இத்திட்டம் வெளிப்படையாக விலக்கவில்லை' என்று, இரு நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டிருந்தது. 'இரண்டு அடுக்கு மற்றும் பல அடுக்குத் தொழிற்சாலை வளாகங்களுக்கு இடையே, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் காட்டிய வேறுபாட்டிற்கு, இத்திட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை' என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.
குறிப்பாக, சுய-நிதித் திட்டத்தின் கீழ் தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு, ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையைச் செலுத்தியுள்ள நிலையில், டில்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டில்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமபை்பு மேம்பாட்டு கழகம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், ஒதுக்கீடு பெற்றவர்களின் உரிமைகளுக்குத் தடையாக இருக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இப்பிரச்னை ஐம்பது ஆண்டுகளை கடந்து நீடிப்பதை சுட்டிக்காட்டி, இரு அமைப்புகளுக்கு இடையே தீர்க்கப்படாத விவகாரங்களின் அடிப்படையில், நில உரிமை மாற்றத்தை மறுப்பது நியாயமற்றது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதைத் தொடர்ந்து, இப்பிரச்னையில், டில்லி துணை நிலை கவர்னர் தரஞ்சித் சிங் சாந்து தலையிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சு நடத்தினார். இதையடுத்து, சொத்துக்களின் உரிமை மாற்றம் தொடர்பான செயல்முறையை டில்லி மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்ளும் என்றும், அதே வேளையில், டில்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், ஒதுக்கீடு பெற்றவர்களிடம் இருந்து நிலுவை தொகைகளை வசூலித்து தடையின்மை சான்றிதழை வழங்கும் என்றும் தீர்மானம் ஏற்பட்டது.
இதை இரு அமைப்புகுளும் ஏற்பட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் இந்த செயல்முறைப்படி தீர்த்து வைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தது.
இரண்டு அமைப்புகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளால், நில உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்த கீர்த்தி நகர் பேக்கேஜிங் வளாகம் உள்ளிட்ட, பல அடுக்கு தொழிற்சாலை வளாகங்களில் உள்ள உரிமையாளர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
