எத்தனை அடி வாங்குறது... அப்போ நிபா, இப்போ குரங்கம்மை: ஷாக்கில் கேரளா
எத்தனை அடி வாங்குறது... அப்போ நிபா, இப்போ குரங்கம்மை: ஷாக்கில் கேரளா
ADDED : செப் 17, 2024 12:11 PM

திருவனந்தபுரம்; கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
காய்ச்சல்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பெங்களூருவில் கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருந்த 24 வயது இளைஞர் காய்ச்சல் காரணமாக பலியானார். மருத்துவ பரிசோதனையில் அவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
கட்டுப்பாடு
இதையடுத்து, அவர் வீடு, வசிக்கும் பகுதி, குடியிருக்கும் வார்டு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் தீவிர கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டது. பல்வேறு கடும் கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
குரங்கம்மை
கடந்த ஜூலையில் இதேபோன்று 14 வயது மாணவர் நிபா வைரசால் பலியானார். 2 உயிரிழப்புகள் நிபா தொற்றால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியாக குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
அறிகுறிகள்
38 வயதான அவர், மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியைச் சேர்ந்தவர். கடுமையான காய்ச்சல் எதிரொலியாக அவர் மஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
ஊர் திரும்பியவர்
உடனடியாக அங்கிருந்த மருத்துவ நிபுணர்கள் அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விரிவான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு முடிவுகளுக்கு காத்திருப்பதாக கூறி உள்ளனர். பாதிக்கப்பட்ட நபர், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கடந்த வாரம் தான் ஊர் திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.