ADDED : அக் 24, 2025 02:18 AM
புதுடில்லி,:''டில்லியில் பாயும் யமுனை நதி மற்றும் கால்வாய்களை துார்வார, பின்லாந்து நாட்டிலிருந்து கனரக துார்வாரும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் அந்த இயந்திரம் இந்தியா வந்து சேரும்,'' என, டில்லி நீர் பாசனம் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு துறை அமைச்சர் பர்வேஷ் வெர்மா கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:
டில்லியில், 52 கி.மீ., பாயும் யமுனை நதியை துார்வார, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற உள்ளோம். இந்த துாரத்தில், 22 கி.மீ., துாரம் மிகவும் மாசடைந்துள்ளது. குறிப்பாக, வசீராபாத் துவங்கி, ஓக்லா வரை அந்த நதி துார் வாரப்பட வேண்டும். இது, அவசியமான ஒன்று. இதற்காக, எட்டு கோடி ரூபாய் செலவில், பின்லாந்து நாட்டிலிருந்து கனரக இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளோம்.
இந்த இயந்திரம், தரையிலும், தண்ணீரிலும் செயல்படக் கூடியது. ஆம்பிபியஸ் கிளாசிக் 4 மல்டிபர்பஸ் டிரட்ஜர் மெஷின் எனும் இந்த இயந்திரம், டிசம்பருக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கிறோம்.
இது, யமுனை நதியை துார்வார, டில்லி மாநில அரசு மேற்கொள்ளும் ஒரு முயற்சியே. இதில், பின்லாந்து நாட்டுடன் பங்குதாரராக இந்தியா சேர்ந்துள்ளது என கூறப்படுவதை ஏற்க முடியாது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் செய்யப்பட்டுள்ள முதலீடு இது.
இவ்வாறு, அமைச்சர் பர்வேஷ் வெர்மா கூறினார்.

