போபால் தனியார் பல்கலை கலவரம் நோய் பரவலை மறைத்ததே காரணம் மத்திய பிரதேச அரசு விளக்கம்
போபால் தனியார் பல்கலை கலவரம் நோய் பரவலை மறைத்ததே காரணம் மத்திய பிரதேச அரசு விளக்கம்
ADDED : டிச 03, 2025 07:47 AM

போபால்: 'போபால் அருகே தனியார் பல்கலையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு, பல்கலை நிர்வாகம் மஞ்சள் காமாலை பரவலை மூடி மறைத்ததே காரணம்' என, மத்திய பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தின் இந்துார் - போபால் நெடுஞ்சாலையில் தனியார் பல்கலை இயங்கி வருகிறது.
இங்கு கடந்த 25ம் தேதி இரவு, 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலை வளாகத்தில் உள்ள பிரச்னைகளை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறிக்கை இந்த போராட்டம் கலவரமாக மாறியது. மாணவர்கள், பல்கலை வேந்தர் பங்களா உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்; வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இது குறித்து விசாரிக்க மூன்று நபர்கள் அடங்கிய விசாரணை குழுவை அரசு அமைத்தது. அவர்கள் பல்கலை வளாகத்தில் விசாரித்து நேற்று அரசுக்கு அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் பல்கலை நிர்வாகம் பல்கலை வளாகத்தை சர்வாதிகார போக்குடன் கோட்டை போல் நடத்துகிறது. பல்கலையில் சுமார், 15,000 மாணவர்கள் படித்துவரும் நிலையில், இங்கு உள்ள உணவு விடுதிகளின் தரம் மோசமாக உள்ளது.
உணவு விடுதிகளை தனியார் நிறுவனங்கள் நடத்தினாலும், அதில் தரத்தை உறுதிப்படுத்தும் பணியை நிர்வாகம் செய்யவில்லை. நவம்பர் 14 முதல் 24 வரை, 35 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டது. அதை மறைக்க முயற்சித்துள்ளனர்.
வன்முறை பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்க முயன்றால், செய்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும், தேர்வுக்கு அனுமதி மறுக்கப்படும் என மிரட்டப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே வன்முறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஏழு நாட்களில் விளக்கம் அளிக்க தனியார் பல்கலைக்கு மத்திய பிரதேச உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால், மத்திய பிரதேச தனியார் பல்கலை சட்டத்தின் கீழ் பல்கலை நிர்வாகத்தை அரசு கைப்பற்றும் என எச்சரித்துள்ளனர்.

