18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட மடிகேரி ஓம்காரேஸ்வரா கோவில்
18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட மடிகேரி ஓம்காரேஸ்வரா கோவில்
ADDED : பிப் 22, 2024 11:28 PM

பெங்களூரில் இருந்து 254 கி.மீ., துாரத்தில், குடகு மாவட்டம், மடிகேரியில் ஓம்காரேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. மைசூரில் இருந்து 117 கி.மீ., துாரத்தில் உள்ளது.
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலை, 18ம் நுாற்றாண்டில் லிங்கராஜேந்திரா 2ம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. சிவப்பு ஓடுகளால், கேரளா கட்டடக் கலையில் கோவில் கட்டியுள்ளனர். இந்த சிவன் கோவிலின் லிங்கம், காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
தன்னுடைய அரசில், தற்செயலாக ஒரு அப்பாவியை மன்னர் கொன்று விட்டார். கொலை குற்ற உணர்வு, மன்னரின் உறக்கத்தையும், மன அமைதியையும் பாதித்தது.
இதற்கு பரிகாரமாக, ராஜ புரோகிதர்களின் ஆலோசனையின்படி, இந்த கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. மையத்தில் மண்டபத்துடன் கூடிய, பெரிய தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. எக்கச்சக்கமான மீன்கள் உள்ளன. இது கோவிலின் அழகை மேலும் மெருகேற்றுகிறது.
மற்ற ஹிந்து கோவில்கள் போன்று இல்லாமல், தனித்துவமான வடிவமைப்பில் கட்டியிருப்பது சிறப்புக்குரியது. கோவிலுக்கு துாண் மண்டபம் இல்லை. மையத்தில் பெரிய மாடம் உள்ளது. நுழைவு வாயிலுக்கு அருகில் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
கோவிலின் வரலாறு, செப்பு தகடில் பொறிக்கப்பட்டு, நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டுள்ளது. எளிமையான அமைப்புடன், அமைதியான சூழலையும் கொண்டுள்ளது.
திங்கள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஓம்காரேஸ்வரா கோவிலுக்கு வருவோர் அருகில் உள்ள ராஜா இருக்கை, மடிகேரி கோட்டை, அபே நீர்வீழ்ச்சியை பார்த்து விட்டு செல்வது வழக்கம். கோடை விடுமுறையில் குடகு சுற்றுலா தலங்கள் களைகட்டும்.
ஹோம் ஸ்டேக்கள், தனியார் சொகுசு விடுதிகள், லாட்ஜ்கள், ஹோட்டல்கள் என அவரவர் வசதிக்கேற்ப தங்கும் விடுதிகள் உள்ளன
- நமது நிருபர் -.